டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து வருகின்ற அக்டோபர் 23ம் தேதி விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்தநிலையில், இந்தியா அணி இன்று நடைபெறும் முதல் பயிற்சிப் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 57 ரன்களும், சூர்யாகுமார் யாதவ் 50 ரன்களும் எடுத்திருந்தனர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக களம் கண்ட ஆரோன் பின்ஸ் மற்றும் மிட்சல் மார்ஷ் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 41 ரன்கள் குவித்தது. மிட்சல் மார்ஷ் 18 பந்துகளில் 35 ரன்களில் வெளியேற அதன் தொடர்ச்சியாக ஸ்மித்தும் 11 ரன்களில் நடையைக்கட்டினார். பின் வரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்ப, மறுபுறம் நங்கூரம் போல் நச்சென்று நின்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் அரைசதம் கடந்து அசத்தினார்.
171 ரன்கள் எடுத்திருந்தபோது பின்ச் 76 ரன்களில் வெளியேறியபோது, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிபாதை தகர்ந்தது. தொடர்ந்து 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே விராட் கோலிதான். இன்றைய போட்டியில் மட்டும் கோலி, இரண்டு கேட்ச், ஒரு ரன் அவுட் செய்தார். அதில் ஒரு கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இரண்டிலும் விராட் கோலி வேற லெவல் செய்து இருப்பார். சிறப்பான சம்பவத்தை செய்த விராட் கோலியின் பிட்னெஸ் வேற லெவல் என்று ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.