இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளவர் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் நடப்பு டி20 உலககோப்பையில் இந்தியா சிறப்பாக ஆடி வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளார்.
சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மிரட்டல் அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 61 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் உள்ளார்.
அவர் கடந்த 2021ம் ஆண்டில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 1326 ரன்களை விளாசியுள்ளார். ரிஸ்வான் கடந்தாண்டு 1000 ரன்களை மொத்தமாக 983 பந்துகளில் எட்டினார். ஆனால், சூர்யகுமார் யாதவ் நடப்பாண்டில் 1000 ரன்களை 550 பந்துகளிலே எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
நடப்பாண்டில் இதுவரை சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 1026 ரன்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 186.54 ஆகும். அவரின் பேட்டிங் சராசரி 44.60 ஆகும். முகமது ரிஸ்வான் தொடக்க வீரராக களமிறங்கி 1000 ரன்களை கடந்திருப்பதை, சூர்யகுமார் யாதவ் நான்காவது வீரராக களமிறங்கி சாதித்திருப்பது மிகவும் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
2021ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் 32 வயதான சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். அவர் இதுவரை 13 ஒருநாள் போட்டியில் ஆடி 2 அரைசதங்களுடன் 340 ரன்களும், 39 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 12 அரைசதங்களுடன் 1270 ரன்களை விளாசியுள்ளார். இவற்றில், தற்போது வரை 1026 ரன்கள் நடப்பாண்டில் விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ் 123 போட்டிகளில் ஆடி 16 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 644 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : T20 World Cup 2022: எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும்..? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஜாலி ட்வீட்