20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இங்கிலாந்து அணி, தற்போது பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட உள்ளது.


இரு அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் தான் விளையாடியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆனது.


முதல் டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்ட் நகரில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 16 இங்கிலாந்து வீரர்கள் சென்றுள்ளனர். அவர்களில் 13 முதல் 14 பேருக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் தொற்று பாதித்து இருக்கலாம் அல்லது உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம்.


இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் சமையல் கலைஞர் ஒமர் மெஸியானே தான் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு சமையல் கலைஞராக உள்ளார். அவரும் இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் தயாரித்து அளித்த உணவு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


உடல்நலக் குறைவு ஏற்பட்ட வீரர்கள் ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிறருக்கு பரவாமல் இருக்கும் என்ற காரணத்தால் அவர்கள் அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜோ ரூட்டுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. எனினும், அவர் தேறி விட்டார். மார்க் வுட் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார்.


இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "கோவிட் 19 தொடர்புடைய வைரஸ்  இங்கிலாந்துக்கு வீரர்களுக்கு பாதிக்கவில்லை. 24 மணிநேரத்திற்கு வீரர்களின் உடல்நலம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.


FIFA World cup 2022: உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து வரலாற்றில் இதுவே முதல்முறை... விவரம் உள்ளே!


இதன்காரணமாக நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் ஆட்டம் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 
ஜோ ரூட் கூறுகையில், "இது துரதிருஷ்டவசமானது ஆகும். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்று நினைக்கவில்லை. இது உணவு ரீதியாக வந்த உடல்நலக் கோளாறு இல்லை என்றே கருதுகிறோம்" என்றார்.


Rishabh Pant vs Sanju Samson: பொன்னான வாய்ப்பை வீணடித்த ரிஷப்பண்ட்..! புறக்கணிக்கப்பட்டாலும் ட்ரெண்டாகும் சாம்சன்..!


இது முதல்முறையல்ல..
இங்கிலாந்து வீரர்கள் இதற்கு முன்பும் இதுபோன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
2019-20 இல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கழிவறையைப் பயன்படுத்தி சில இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்றனர்.






பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொல்கிறது?
இதனிடையே, “நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இங்கிலாந்து வீரர்கள் சிலர்  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளது.