நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று ஆடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களும் எடுத்தனர்.


இந்திய அணிக்காக தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு ஆடி வரும் ரிஷப்பண்ட், தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டே இருக்கும் நிலையில், அவரது இடத்தில் ஆடி வருபவராக கருதப்படும் ரிஷப்பண்ட் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.




அவரது பேட்டிங் திறன் மீதும், சஞ்சு சாம்சன் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையிலும் இன்று நடந்து வரும் போட்டியில் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று தவான் ஆட்டமிழந்த பிறகு 13வது ஓவரிலே பேட்டிங் செய்ய ரிஷப்பண்ட்டிற்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால், இந்த போட்டியில் கிடைத்த அருமையான வாய்ப்பையும் ரிஷப்பண்ட் தவறவிட்டுள்ளார்.


அவர் 16 பந்துகளில் 2 பவுண்டரியுடன் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து மிட்ச்செல் பந்தில் வெளியேறினார். மேலும், இந்த நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர் முழுவதுமே ரிஷப்பண்ட் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவரது இடம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல, அணியில் ரிஷப்பண்டை போலவே சமீபகாலமாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வரும் தீபக்ஹூடாவும் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இன்றைய போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கினார். அவர் 25 பந்துகள் பேட் செய்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகினார்.




இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், இன்றைய போட்டியிலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஐ.பி.எல். தொடரில் தவிர்க்க முடியாத வீரராக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அசத்தலான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாம்சன், இந்திய அணியில் மட்டும் தவிர்க்கப்பட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேள்வியை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


ரிஷப்பண்ட் இதுவரை 30 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 5 அரைசதங்களுடன் 865 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 66 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 987 ரன்கள் எடுத்துள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 அரைசதங்கள் 5 சதங்களுடன் 2 ஆயிரத்து 123 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் நீண்ட நாட்களாக நிரந்தர இடத்திற்காக போராடி வரும் சஞ்சு சாம்சன் 11 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதத்துடன் 330 ரன்களும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 296 ரன்களும் எடுத்துள்ளார். தொடக்க வீரராக அசத்தும் சாம்சனுக்கு தொடக்க வரிசையில் களமிறங்கிய போட்டிகளில் வாய்ப்புகள் போதியளவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.