22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
குரூப் இ பிரிவில் கோஸ்டா ரிகா-ஜெர்மனி இடையிலான ஆட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு முதல் முறையாக பெண் நடுவர்கள் குழு களத்தில் இறங்குகிறது.
ஆடவர் கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் பெண் நடுவர்கள் களமிறங்கப்போவது இதுவே முதல் முறையாகும்.
வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த போட்டி நாளை நடக்கப் போகிறது. நடுவர் ஸ்டெஃபனி ஃபிராப்பர்ட், துணை நடுவர்கள் நியூசா பேக், கரென் டயஸ் ஆகியோர் கொண்ட பெண் நடுவர் குழு நாளை களத்தில் இறங்குகின்றனர்.
இதனை ஃபிபா அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகவலை ஃபிபா அமைப்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் குரூப் சி பிரிவில் போலந்து மெக்சிகோ இடையிலான ஆட்டத்தில் ஃபிராப்பர்ட் நான்காவது அதிகரியாக இருந்தார். கோஸ்டா ரிகா-ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் இவர் தான் பிரதான நடுவராக செயல்படவுள்ளார்.
ஸ்டிஃபெனி ஃபிராபர்ட்
இவர் பிரான்ஸைச் சேர்ந்தவர் ஆவார். 1983-ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தார். 2009-ஆம் ஆண்டு முதல் ஃபிபா சர்வதேச நடுவர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளார். சில குறிப்பிட்ட கால்பந்தாட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நியூசா பேக் பிரேசிலைச் சேர்ந்தவர் ஆவார். காரென் டயஸ் மெக்சிகோவைச் சேர்ந்தவர்.
ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தையச் சுற்று) முன்னேறும். நேற்று முதல் மூன்றாவது மற்றும் கடைசி குரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.