இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸ், வினோத் காம்ப்ளியின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல்,டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.


இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட்:


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இலங்கையில் உள்ள காலி (Galle)சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று(செப்டம்பர் 26) தொடங்கியது.

Continues below advertisement


இதில் இரண்டாவது நாளான இன்று (செப்டம்பர் 27) இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.


30 ஆண்டுகால சாதனையை முறியடித்த கமிந்து மெண்டிஸ்:


முன்னதாக இன்றைய போட்டியில் இலங்கை அணி வீரர் மிந்து மெண்டிஸ், வினோத் காம்ப்ளியின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறார். இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கமிந்து மெண்டிஸ் வெறும் 8 போட்டிகளில் 1000 ரன்களை எட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் தான் அறிமுகமானதில் இருந்து விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய கமிந்து மெண்டிஸ், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.


இதற்கிடையில், 14 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்திய முன்னாள் இந்திய பேட்டர் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய வேகமான ஆசிய பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அந்தவகையில் 1994 ஆம் ஆண்டிற்கு பிறகு வினோத் காம்ப்ளியின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் கமிந்து மெண்டிஸ். நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கமிந்து மெண்டிஸ் 182 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: IND vs BAN 2nd Test:"எனக்கு வயிற்றுவலி"இந்தியா - வங்கதேச டெஸ்டில் அலறித் துடித்த ரசிகர்! கடைசியில் ட்விஸ்ட்


மேலும் படிக்க: Indian Hockey Team: அவரோட செல்ஃபி எடுத்தாங்க..ஆனா எங்கள புறக்கணிச்சிட்டாங்க! ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் ஷாக்