கான்பூரில் நடந்து வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது உள்ளூர் பார்வையாளர்கள் சிலர் தன்னை தாக்கியதாக வங்கதேச ரசிகர் டைகர் ராபி குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


இந்தியா - வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாஹீர் ஹாசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களம் இறங்கினார்கள்.


இதில் ஷாஹீர் ஹாசன் 24 பந்துகள் களத்தில் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து முமூனுல் ஹக்யூ களத்திற்கு வந்தார். இதற்கிடையே ஷத்மான் இஸ்லாம் 24 ரன்களில் நடையைக்கட்ட பின்னர் வந்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில் போட்டியின் போது மழை குறிக்கிட்டதால் தற்போது ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வரை வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. 


திடீரென ஏற்பட்ட பரபரப்பு:




இந்த நிலையில் தான் இந்தியா - வங்கதேச போட்டியின் போது ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. அதாவது வங்கதேச கிரிக்கெட் அணியின் தீவர ரசிகர்களில் ஒருவர் டைகர் ராபி. இவர் இன்று கான்பூரில் நடைபெற்ற போட்டியை நேரில் பார்ப்பதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை யரோ அடித்ததாக கூறப்படுகிறது.


இதானால் அவர் அலறி துடித்துள்ளார். இதனைக்கண்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக டைகர் ராபி பேசுகையில்,"அவர்கள் என் முதுகு மற்றும் அடிவயிற்றில் அடித்தார்கள், என்னால் சுவாசிக்க முடியவில்லை,"என்றார். ஆனாலும் போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.


இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "சி பிளாக் நுழைவாயிலுக்கு அருகில் அவர் மூச்சுத் திணறுவதை எங்கள் அதிகாரி ஒருவர் கண்டார், மேலும் அவர் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்காக நாங்கள் காத்திருப்போம், ”என்று ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.