பிரபல யூடியூபர் டோலி சாய்வாலா உடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள் எங்களை புறக்கணித்தனர் என்று இந்திய ஹாக்கி அணி வீரர் ஹர்திக் சிங் கூறியுள்ளார்.


ஹாக்கியில் அசத்தும் இந்தியா:


அண்மையில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இப்படி இந்த ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கும் வரவேற்பும், மரியாதையும் புகழ் வெளிச்சமும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.


விமான நிலையத்தில் நடந்த சம்பவம்:


இந்த நிலையில் தான் இந்திய ஹாக்கி அணி வீரர் ஹர்திக் சிங் ஒரு பரபரப்பான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது வித்தியாசமாக தேநீர் தயாரிக்கும் பாணியால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் டோலி சாய்வாலா. சாலை ஓரம் இருக்கும் இவரது கடைக்குச் சென்ற தேநீர் பருகி இவருடன் செல்பி எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது.


உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் கூட அண்மையில் இந்தியா வந்த போது டோலி சாய்வாலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்படி உலகம் முழுவதும் அவர் பிரபலம். இப்படிப்பட்ட சூழலில் தான் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தங்களது வெற்றியை தொடர்ந்து நாடு திரும்பி உள்ளனர். அப்போது விமான நிலையத்தில்  டோலி சாய்வாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.


ஹாக்கி வீரர்களை மக்களுக்கு தெரியவில்லை:


அதே நேரம் ஹாக்கி வீரர்களுடன் யாரும் செல்ஃபி எடுப்பதை புறக்கணித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் சிங் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசுகையில்,"விமான நிலையத்தில் நான் அதை என் கண்களால் பார்த்தேன். ஹர்மன்ப்ரீத்சிங். நான், மன்தீப் சிங். நாங்கள் 5-6 பேர் இருந்தோம். டோலி சாய்வாலாவும் இருந்தார். மக்கள் எங்களை அடையாளம் காணவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தோம். எங்களை நினைத்து நாங்கள் அசிங்கமாக உணர்ந்தோம்.


ஹர்மன்ப்ரீத் 150க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார், மன்தீப் 100க்கும் மேற்பட்ட பீல்டு கோல்களை அடித்துள்ளார்,ஒரு விளையாட்டு வீரருக்கு, புகழ் மற்றும் பணம் இரண்டும் ஒன்றுதான். ஆனால், மக்கள் உங்களைப் பார்த்து பாராட்டும் போது, ​​ஒரு விளையாட்டு வீரருக்கு அதைவிட பெரிய மனநிறைவு எதுவும் இல்லை"என்று கூறியுள்ளார் ஹர்திக் சிங்.


ஹர்திக் சிங், இந்தியாவுக்காக 142 போட்டிகளில் விளையாடி அணியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,