டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 27) காலை நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. இதன் மூலம் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி பெற்றுள்ளது. அதேபோல் அரையிறுதி சுற்றின் 2 வது போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும்.
இலங்கை அணியின் தொடர் தோல்வி:
முன்னதாக இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐசிசி தரவரிசை பட்டியலில் டாப் 10 அணிகளில் இருக்கும் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதாவது இலங்கை அணி விளையாடிய 4 போட்டிகளில் நெதர்லாந்து அணியை மட்டும் தான் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்வி அந்த நாட்டு ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் அப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
பயிற்சியாளர் ராஜினாமா:
இந்நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆலோசகர் மஹலே ஜெயவர்த்தனே அப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜெயவர்தனே அவரது பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அணியில் செய்தார்.
அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவிப்பதோடு அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளது. அதேபோல் கிறிஸ் சில்வர்வுட்,” சர்வதேச பயிற்சியாளராக இருப்பது என்பது அன்புக்குரியவர்களிடமிருந்து நீண்ட காலத்திற்கு விலகி இருக்க வேண்டும். எனது குடும்பத்தினருடன் நீண்ட உரையாடலுக்குப் பிறகு நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கனத்த இதயத்துடன் இருக்கிறேன்.நான் வீடு திரும்புவதற்கான நேரம் இது என்று உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: IND vs ENG Guyana Weather: கயானாவில் பொளந்து கட்டும் கனமழை..! கைவிடப்படுகிறதா இந்தியா-இங்கிலாந்து போட்டி..? யாருக்கு லாபம்..?
மேலும் படிக்க: IND vs ZIM T20I Series: ஜிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேறிய இளம் வீரர்.. முக்கிய வீரரை களமிறக்கிய பிசிசிஐ.. காரணம் என்ன?