IND vs ENG Guyana Weather: டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் அரையிறுதி போட்டியில் இன்று காலை தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தநிலையில் டி20 உலகக் கோப்பை 2024ன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள கயானாவில் அமைந்துள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.






இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ரிசர்வ் நாள் இல்லாதது போட்டியின் ஆரம்பம் முதலே விவாதப் பொருளாக உள்ளது. ஏன் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்படவில்லை என ஐசிசியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்தநிலையில், இரண்டாவது அரையிறுதி மழையால் ரத்து செய்யப்பட்டால், எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்? கயானாவில் கடந்த 12 மணி நேரமாக மழை பெய்து வருவதால், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. 


இன்று வானிலை எப்படி இருக்கிறது?


இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் இன்று (ஜூன் 27 ஆம் தேதி) கயானாவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெஸ்ட் இண்டீஸில் இன்று ஜூன் 26 ஆம் தேதி என்பதால் அங்கு தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்ய 61 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்திய நேரப்படி கணக்கிட்டால் வெஸ்ட் இண்டீஸில் நண்பகல் 12 மணி வரை 50 சதவீத மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 மணிக்கு வானம் தெளிவாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், மாலை 4 மணிக்கு மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மழை தொடர்ந்து நீடித்தால் இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதியை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளது. 


ரிசர்வ் நாள் கிடையாது:


2024 டி20 உலகக் கோப்பை குறித்து ஐசிசி வெளியிட்ட விதிகளை கிரிக்கெட் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பையில் இதுவரை பல போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று (ஜூன் 27ஆம் தேதி) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியை எந்த சூழ்நிலையிலும் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) அறிவித்திருந்தது. இதற்காக போட்டி நேரத்தில் 250 நிமிடங்கள் (அதாவது 4 மணிநேரம்) கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்திருந்தது. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கையின்படி, இந்த 250 கூடுதல் நிமிடங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றே தெரிகிறது. 


போட்டி ரத்து செய்யப்பட்டால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி..? 


ஐசிசி விதிகளின்படி, போட்டியின் சரியாக நடந்து முடிக்க வேண்டுமெனில், இரு அணிகளும் தலா குறைந்தது 10 ஓவர்களாவது விளையாட வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்கவில்லை என்றால், இந்தியா விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். சூப்பர்-8 அட்டவணையில் இங்கிலாந்தை விட அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.