2024 டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து, 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஐபிஎல் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என தெரிவித்துள்ளது.


ஏன் நிதிஷ் ரெட்டி விளையாடவில்லை..?


ஐபிஎல் 2024 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பேட்டிங் செய்த நிதிஷ் ரெட்டி 303 ரன்கள் பேட்டிங் மூலமாகவும், 3 விக்கெட்டுகள் பந்துவீச்சு மூலமும் எடுத்தார். இதன் காரணமாக நிதிஷ் ரெட்டி ஐபிஎல் 2024 சீசனின் வளர்ந்து வரும் வீரர் விருதையும் பெற்றார். 


இந்த சிறந்த செயல்பாட்டிற்காக, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஆடவர் 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டார். மறுபுறம், சிவம் துபே தற்போது டி20 உலகக் கோப்பை 2024 இல் விளையாடி வருகிறார், அங்கு அவர் இதுவரை 7 போட்டிகளில் 106 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளின் ஆட்டத்தை பார்க்கும்போது அவரது ஃபார்ம் திரும்பியுள்ளது என்றே கூறலாம். இந்தநிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக தனது முதல் அழைப்பைப் பெற்ற இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி, துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக ஓரங்கட்டப்பட்டார். அவருக்கு பதிலாக நட்சத்திர ஆல்ரவுண்டர் சிவம் துபே இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.


இந்தியா-ஜிம்பாப்வே தொடர் எப்போது தொடங்குகிறது?


இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்து வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்தத் தொடரில், இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே மட்டுமே ஜிம்பாப்வே தொடரில் இடம்பெற்ற ஒரே வீரர். 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெற்றிருந்தாலும், இந்திய அணிக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி வருகின்ற ஜூலை 1ம் தேதி ஜிம்பாப்வே செல்கிறது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உள்ளிட்ட பல அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 அட்டவணை:


இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் முழுவதும் ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இந்தியா vs ஜிம்பாப்வே 1வது T20I: ஜூலை 6
இந்தியா vs ஜிம்பாப்வே 2வது T20I: ஜூலை 7
இந்தியா vs ஜிம்பாப்வே 3வது T20I : ஜூலை 10
இந்தியா vs ஜிம்பாப்வே 4வது T20I: ஜூலை 13
இந்தியா vs ஜிம்பாப்வே 5வது T20I: ஜூலை 14


புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:


சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே.