என்னைப் பொறுத்தவரை சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கலாம் என்று ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தற்போதுவரை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.


இன்னும் மூன்று அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்று (ஜூன் 15) நடைபெறும் 33 வது லீக் போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் ப்ளேயிங்க் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன்:


இச்சூழலில் தான் சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், “ என்னைப் பொறுத்தவரை சிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கலாம். ஏனென்றால் சிவம் துபேவால் இரண்டு ஓவர்கள் கூட வீச முடியவில்லை. இதனால் நிச்சயம் சஞ்சு சாம்சனை தான் தேர்வு செய்ய வேண்டும்.  ஏனென்றால் சூழலுக்கு ஏற்ப விரைவாக தகவமைத்து கொண்டு அட்டாக் செய்யக் கூடிய வீரர் சஞ்சு சாம்சன்.


இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக விக்கெட்டை கொடுத்து வெளியேறினால், சஞ்சு சாம்சன் போன்ற வீரரால் இன்னிங்ஸை கட்டமைத்து கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்களுடன் அட்டாக்கில் ஈடுபட முடியும் என்று நினைக்கிறேன்.  அதேபோல் தொடக்க வீரர்களாக களமிறங்கி வரும் ரோஹித் ஷர்மா - விராட் கோலி கூட்டணியை பிரிக்க தேவையில்லை என்று கருதுகிறேன்.


அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல சகோதர பாசம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டிகளை வெல்ல வேண்டும். அது இந்திய கிரிக்கெட்டுக்கும் சிறப்பாக இருக்கும்”என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!


மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!