புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் இன்று இந்தியா - கனடா அணிகள் மோத இருக்கின்றன. இந்திய அணிக்கு குழு ஏ பிரிவில் இது இறுதிப்போட்டியாகும். இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பெரிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளது. 


இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், சூப்பர் 8ல் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வருகின்ற ஜூன் 20ம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. 


ரோஹித் சர்மா சாதனை படைக்க வாய்ப்பு: 


37 வயதான ரோஹித் சர்மா இதுவரை 154 டி20 போட்டிகளில் விளையாடி 194 சிக்ஸர்களை அடித்துள்ளார். கனடாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைப்பார். மேலும், ரோஹித் சர்மா டி20 போட்டிகளில்  இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 4042 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


டி20யில் அதிக சிக்ஸர்களில் முதலிடம்: 


இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 194 சிக்ஸர்களுடன் டி20 போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் இதுவரை 122 டி20 போட்டிகளில் 173 சிக்சர்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டி20 கேப்டன் ஜோஸ் பட்லர் 130 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 128 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். ஐசிசி டி20 தரவரிசை முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ், 125 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா எப்படி?


ரோஹித் சர்மா இதுவரை நடப்பு டி20 உலகக் கோப்பையில் குரூப் போட்டிகளில் விளையாடி 68 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஜூன் 5ம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்திற்கு எதிராக 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.  பின்னர், ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்களும், அமெரிக்காவிற்கு எதிராக வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


அயர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டி20 உலகக் கோப்பையில் இதுவரை நடந்த அனைத்து பதிப்புகளிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.