இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இன்றைய போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தற்போதுவரை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இன்னும் மூன்று அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சுப்மல் கில் - ஆவேஷ்கான் விடுவிப்பு:
இந்நிலையில் இந்திய அணி இன்று (ஜூன் 15) நடைபெறும் 33 வது லீக் போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இன்றைய போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணியுடன் இவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்ற தகவலை பிசிசிஐ மூத்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் கூறிய தகவலில், “ சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் அமெரிக்காவில் குரூப் லீக் சுற்றுகள் வரை மட்டுமே தங்கியிருக்க வேண்டும்.
அது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. எனவே, இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு, அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். கேப்டன் ரோஹித் ஷர்மா அல்லது நட்சத்திர பேட்டர் விராட் கோலிக்கு காயம் ஏதேனும் இருந்தால், ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம். டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்தில் நான்காவது தொடக்க ஆட்டக்காரர் தேவையில்லை”என்று கூறியுள்ளனர்.
சாரா டெண்டுல்கருடன் வெளியே சுற்றிய சுப்மன் கில்?
அதேநேரம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்தனர். ஆனால் சுப்மன் கில் மட்டும் போட்டியை காண்பதற்கு கூட மைதானத்திற்கு வரவில்லை. முன்னதாக டி20 உலகக்கோப்பையை நேரில் பார்ப்பதற்காக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சாரா டெண்டுல்கர் இருவரும் அமெரிக்கா வந்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் போட்டிகளை பார்த்த பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மறுபக்கம் சாரா டெண்டுல்கர் தனது தோழிகளுடன் நியூயார்க்கை சுற்றி பார்த்து வருகிறார். அதேபோல் சாரா டெண்டுல்கருடன் சுப்மன் கில் வெளியே சுற்றியதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!