உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் விக்கெட் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இதுகுறித்து அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ந லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் இருவரும் சதமடித்தனர்.
தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். ரஹானே 89, ஷர்துல் தாகூர் 51, ஜடேஜா 48 ரன்கள் விளாச இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் சுப்மன் கில் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப்-சைடில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். ஆனால் இந்த கேட்ச் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. க்ரீன் தரையோடு சேர்ந்தது போல் பிடிப்பதுபோல தெரிந்தது. உடனடியாக 3வது நடுவரிடம் முடிவுக்குப் போக அவரும் அவுட் என அறிவித்தார்.
நடுவரின் இந்த முடிவுக்கு இந்திய அணி ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் தங்கள் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் தான் ஆட்டமிழந்தது குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்த புகைப்படத்தைப் பதிவிட்டு ‘தலையில் அடித்துக் கொள்ளும்’ ஸ்மைலியை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Shubman Gill Controversial Wicket: சர்ச்சையை கிளப்பும் மூன்றாவது நடுவரின் முடிவு; சராமாரியாக விமர்சிக்கும் முன்னாள் ஜாம்பவான்கள்..!