Shubman Gill Controversial Wicket: இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வீரர் கில்லின் விக்கெட்டுக்கு மூன்றாவது நடுவரின் முடிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறன. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் சேர்த்தது. இதனால் 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 444 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஜோடி பொறுப்புடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 41 ரன்களில் இருந்த போது, ஸ்ரைக்கர் பகுதியில் சுப்மன் கில் இருந்தார். அவர் ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை எதிர்கொண்டார். குத்தி வந்த பந்தை லாவகமாக ஆஃப்-சைடில் கில் தட்டி விட அதனை கேமரூன் க்ரீன் தரையோடு சேர்ந்தது போல் பிடிக்க, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட் என கொண்டாடினர். கள நடுவர் மூன்றாவது நடுவரின் முடிவிற்கு போக, களத்தில் திக் திக் நிமிடங்கள் தொடங்கியது.
பலமுறை அந்த கேட்ச்சை ரீப்ளேவில் பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என கூற, கில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அப்போது கில் 19 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரி விளாசி 18 ரன்கள் சேர்த்திருந்தார். மூன்றாவது நடுவரின் முடிவு இந்திய அணிக்கும் இந்திய அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை தந்தது. மேலும், இந்த போட்டியின் ஆங்கில கமெண்டேட்டரியில் இருந்த இந்தியாவின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, “கில்லின் இடத்தில் ஸ்மித் இருந்திருந்தால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்திருக்க மாட்டார்” என கூறினார்.
ஏற்கனவே மூன்றாவது நடுவரின் முடிவு இந்திய அணி ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்த நிலையில், ரவி சாஸ்திரியின் இந்த ரியேக்ஷனை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் கில்லின் விக்கெட் குறித்து மூன்றாவது நடுவர் தனது முடிவை எடுக்கும் போது கண்களைக் கட்டிகொண்டு எடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ரீப்ளேவில் கேமரூன் க்ரீனின் விரல்கள் பந்துக்கு கீழ் இருப்பது போல் ஒரு கோணத்தில் தெரிகிறது. மற்றொரு கோணத்தில் பந்து தரையில் பட்டது போல் தெரிகிறது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பந்து தரையில் பட்ட கோணத்தினை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.