WTC Final 2023: உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, வெற்றிக்கு 280 ரன்கள் தேவை எனும் நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகளுடன் உள்ளது. 


லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறன. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் சேர்த்தது. இதனால் 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 444 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.  இரண்டாவது இன்னிங்ஸைப் பொறுத்தவரையில் இந்திய அணி சார்பில் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும் ஷமி மற்றும் யுமேஷ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அலெக்ஸ் கேரி மட்டும் அரைசதம் கடந்து 66 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 


அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 444 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் எனும் நோக்கில் பொறுப்புடன் ஆடத் தொடங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் தொடங்கினர். சிறப்பான தொடக்கத்திற்காக காத்திருந்த இந்த ஜோடியை ஸ்காட் போலண்ட் பிரித்தார். இவரது பந்தில் சுப்மன் கில் அவுட் ஆனார். இவரது அவுட் மூன்றாவது நடுவரால் கொடுக்கப்பட்டது. இந்த விக்கெட் நாட் அவுட் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து கில் வெளியேறினார். 


அதன் பின்னர் முதல் இன்னிங்ஸில் 15 ரன்னில் வெளியேறிய ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸில் தனது விக்கெட்டை 43 ரன்களில் இருந்த போது இழந்து  வெளியேறினார். அதன் பின்னர் புஜாரா தேவையில்லாத ஷாட்டால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.  அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை அதன் பின்னர் இணைந்த விராட் கோலி மற்றும் ராஹானே சீராக ரன்கள் சேர்க்க தொடங்கினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக முன்னேற ஆரம்பித்தது. 


குறிப்பாக விராட் கோலி கிடைத்த பந்துகளை பவுண்டரிகளாகவும் இரண்டு ரன்களாகவும் மாற்றத் தொடங்கினார். மறுமுனையில் இருந்த ரஹானே பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் உள்ளது. களத்தில் விராட் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 20 ரன்களுடனும் உள்ளனர். விராட் கோலி இந்த 44 ரன்களின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 5 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை எட்டியுள்ளார். முதல் இடத்தில் சச்சின் தெண்டுல்கர் உள்ளார்.