இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற 7ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள்:
பிரவீன் ஆம்ரே- 1992
ஆர்.பி.சிங்-2006
ரவிச்சந்திரன் அஸ்வின்-2011
ஷிகர் தவான்-2013
ரோகித் சர்மா-2013
ப்ருத்வி ஷா-2018
ஸ்ரேயாஸ் ஐயர் -2021
மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 170 ரன்களுடன் அவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு முன்பாக ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியில் 177 ரன்கள் அடித்து இப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஷிகார் தவான் உள்ளார். அவர் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 187 ரன்கள் எடுத்தார்.
இப்படி தன்னுடைய அறிமுக போட்டியிலே பல ரெக்கார்டுகளை படைத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த போட்டியில் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் அடுத்த போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்ப உள்ளார். இதனால் தற்போதைய அணியிலிருந்து எந்த வீரரை அணி நிர்வாகம் நீக்கும் என்ற சந்தேகம் அதிகம் வலுத்துள்ளது. புஜாரா அல்லது ரஹானே ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ; டாப் 3 இடத்தைப்பிடித்த அஷ்வின்