இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து, தொடக்கத்திலே வில் யங்கின் விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.


நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதமும், வில்லியம் சோமர்வில்லேவும் மேற்கொண்டு விக்கெட் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக ஆடினர். அவ்வப்போது மட்டும் ஓரிரு ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிப்பதற்கு இந்திய கேப்டன் ரஹானே சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேலை மாறி, மாறி பயன்படுத்தினார். மறுமுனையில் இஷாந்த் சர்மாவும், உமேஷ் யாதவும் வேகப்பந்துவீச்சில் குடைச்சல் கொடுத்தனர்.


இன்றை நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த டாம் லாதமை பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின்.  இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 418வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட் வீழ்த்தி இருக்கும் சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது அதனை அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளிலேயே தாண்டியுள்ளார்.






டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ் இரண்டாம் இடத்திலும், கும்ப்ளே முதலிடத்திலும் உள்ளனர். 


அஷ்வினின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து ஹர்பஜான் ட்வீட் பதிவிட்டுள்ளார். 






தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், டாம் ப்ளெண்டலின் விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார் அஷ்வின். இது அவருக்கு 419வது விக்கெட்! இன்னும் போட்டி நடைபெற்று வரும் நிலையில், 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறி வருகின்றது, இந்தியா வெற்றியை நெருங்கி இருக்கின்றது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண