டெஸ்ட் கிரிக்கெட்டை 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆடும் அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அவர்களது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான நாள் பாக்சிங் டே டெஸ்ட் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள், அதாவது டிசம்பர் 26ம் நாள் ஆஸ்திரேலிய அணி மெல்போர்ன் மைதானத்தில் ஏதாவது ஒரு அணியுடன் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த டெஸ்ட் போட்டியே பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.


வர்ணனையாளராக மாறிய வார்னே மகன்:


இந்த நிலையில், நடப்பாண்டிற்கான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவின் ஜாம்பவனான ஷேன் வார்னேவிற்கு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.


மேலும், இந்த போட்டியில் வர்ணனையாளராக ஷேன் வார்னேவின் மகன் ஜேக்சன் வார்னே பங்கேற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து வர்ணனை செய்தார். அப்போது, அவர் தனது தந்தை பற்றிய பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஷேன் வார்னே கடந்தாண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






சுழல் ஜாம்பவான்:


தனது மாயாஜால சுழலில் எதிரணிகளை மிரளவைத்த ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளமானவை ஆகும். கடந்தாண்டு மார்ச் மாதம் 4ம் தேதி காலமான ஷேன் வார்னே மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். அதில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 71 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்டில் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், 55 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 57 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை முதன்முதலில் கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஷேன் வார்னே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமைக்குரியவர் வார்னே என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Ashwin: அடித்தது ஜாக்பாட்! 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா அஸ்வின்? ரசிகர்கள் ஆர்வம்


மேலும் படிக்க: Best T20I XI of 2023: 2023 ஆம் ஆண்டின் சிறந்த T20I XI... இடம்பிடித்த இந்தியாவின் இளம் வீரர்கள் யார்?