தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சுரியனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பைத் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்காக கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


ப்ளேயிங் லெவனில் அஸ்வின்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க முதலில் பந்துவீசி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் பின்பக்கத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரும், அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் களமிறங்கியுள்ளார்.


உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் சமீபகாலமாக இந்திய அணிக்காக அறிவிக்கப்பட்டாலும், ஆடும் லெவனில் களமிறக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டே வருகிறார். இந்த சூழலில், ஜடேஜாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்க வாய்ப்பு கிடைத்த அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் அசத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


500 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா?


37 வயதான அஸ்வின் இதுவரை 95 டெஸ்ட் போட்டியில் ஆடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள அஸ்வின் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியவர் என்ற பெருமையை அடைவார்.


கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடிய அஸ்வின் 5 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார். உலகின் அனைத்து அணிகளுக்கும் எதிராக சிறப்பாக ஆடியுள்ள அஸ்வின் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை ஆகும்.  தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் வெறும் 10 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனால், இன்றைய டெஸ்ட் போட்டியில் அவரை தேர்வு செய்ததற்கு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


ரசிகர்கள் எதிர்பார்ப்பு


அஸ்வின் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாக 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமாக 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்கியுள்ள அஸ்வின் அசத்தலான கம்பேக் தருவாரா? 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.


மேலும் படிக்க: IND vs SA Test Stats: அதிக ரன்களில் சச்சின், அதிக விக்கெட்களில் கும்ப்ளே.. இந்தியா-தென்., டெஸ்ட் வரலாற்றின் டாப் 10!


மேலும் படிக்க: David Warner: ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்து இரண்டாம் இடம்.. புதிய மைல்கல்லில் மையம்கொண்ட வார்னர்..!