ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுபவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த இவர் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். இவருக்கு இந்திய அணியில் போதியளவு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துகொண்டு இருக்கிறது.


மனம் திறந்த சாம்சன்:


இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், சஞ்சு சாம்சன் தான் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், “ அது எப்படியோ அப்படியே.. நான் கடந்து செல்வதையே தேர்வு செய்கிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்.






சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு:


இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜாவின் ஆரம்ப கால கிரிக்கெட் தருணம் போன்ற சமயங்களில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவிற்கு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.


திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த ஆசிய கோப்பை தொடரிலும் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐய்யர் ஆகிய இருவரும் காயத்திற்கு பிறகு உள்ளூரில் எந்த போட்டியிலும் ஆடாமல் நேரடியாக ஆசிய கோப்பைத் தொடரில் பங்கேற்றனர். அதுவும் விவாதத்தை ஏற்படுத்தியது.


இந்திய அணி:


29 வயதாகும் சாம்சன் இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 390 ரன்களும், 24 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 280 ரன்களும் எடுத்துள்ளார். ஆனால், ஐ.பி.எல். தொடரில் 152 போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 20 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 888 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான அணியில் சுப்மன்கில், இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. என்னென்ன தேதியில் என்னென்ன விளையாட்டு..? முழு விவரம் உள்ளே..!


மேலும் படிக்க: Rohit Sharma T20 Debut: 'சுத்தி அடிக்குற லத்தி' இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20-இல் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள்