Rohit Sharma T20 Debut: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது முழுநேர கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகின்றது. 


இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட ஒருநாட்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது என்பதே பலகட்ட சவால்கள் நிறைந்த விஷயம். அப்படி இருக்கும்போது ஒரு வீரர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச் சரியாக பயன்படுத்தி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி அதன் பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் பொறுப்பு சச்சின் தெண்டுல்கர், சேவாக் போன்ற முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு ரோகித் வசம் கொடுக்கப்பட்டது. 




ரோகித் தொடக்க வீரராக களமிறங்கிய காலம் முதல் இன்று வரை அவருடன் இணைந்து இந்திய அணிக்கான இன்னிங்ஸை தொடங்குபவர்கள் மாறிக்கொண்டே உள்ளார்களே தவிர ரோகித் மட்டும் இன்னும் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டுள்ளார். அது டி20 கிரிக்கெட்டோ, ஒருநாள் தொடரோ டெஸ்ட் போட்டியோ என எதுவாக இருந்தாலும் ரோகித் சர்மா இன்றுவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உள்ளார். 




ரோகித் சர்மாவை கிரிக்கெட் உலகம் முழுவதும் உள்ள ஜாம்பவான்கள் பாராட்டினாலும், அனைவரும் பார்த்து வியக்கும் அவரது திறமைகளில் ஒன்று அவரைப் போல் ஃபுல் -ஷாட் அடிப்பது மிகவும் கடினம் என்பதுதான். முகத்திற்கு நேராக வேகமாக வரும் பந்தினை மிகச் சரியாக கணித்து அதனை சிக்ஸராக அடிப்பது மிகவும் சவாலான செயல் என கூறுவதுதான். அதேபோல், டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா 5 ஓவர்கள் வரை களத்தில் இருந்துவிட்டால் போட்டியின் முடிவையே முற்றிலும் மாற்றிவிடும் தன்மை அவரிடம் உள்ளது என எதிரணியினர் அவரது விக்கெட்டை விரைவில் கைப்பற்ற நினைப்பர். 


சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது,” டெத் ஓவர்களில் மிகவும் மோசமான கேப்டன் யார் என்ற கேள்வியை அஸ்வினிடம் கேட்டுள்ளார். அதற்கு அஸ்வின் தோனி என பதில் அளித்ததாகவும், உடனே விராட் கோலி, ரோகித் சர்மாதான் மிகவும் அபாயகரமான கேப்டன் என பதில் அளித்துள்ளார். ரோகித்  சர்மாவிற்கு எப்படி போட்டாலும் அடிப்பார் எனவும் கோலி கூறியதாக அஸ்வின் கூறியது வைரலானது. 




ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியின் முழுநேர கேப்டன் என்ற பெருமையையும் பொறுப்பையும் கொண்டு வந்து சேர்க்க முக்கிய காரணமே அவரது ஐபிஎல் கேப்டன்சிதான். ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. அதாவது 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் டைட்டிலை வென்று அசத்தியது. 




ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையுடன் உள்ளார். இவர் ஒருநாள் தொடரில் மூன்று முறை 200 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவரது அதிகபட்ச ஸ்கோர் 264 ரன்கள். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 4 சதம், 29 அரைசதங்கள் என மொத்தம் 3853 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.