நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிசானே. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இவர் மீது சமீபத்தில் 17வயது மதிக்க தக்க சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. 


இந்நிலையில் அந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள் நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


 






இந்த விவகாரம் நேபாள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சந்தீப் லமிசானே. இவர் நேபாள் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் ஐபிஎல், பிக்பேஷ், கரீபியன் பிரிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்றுள்ளார். 




மேலும் படிக்க:”இப்ப தெரியுதா தோனி ஏன் இப்படிதான்னு?” : ரிஷப் பண்ட்டுக்கு எதிராக கிளம்பிய நெட்டிசன்கள்..




இந்த விவகாரம் தொடர்பாக காத்மாண்டு காவல்துறை அதிகாரி, “எங்களுடைய காவல்துறையினர் நாகர்கோட் மற்றும் சினமன்கள் ஆகிய பகுதியிலுள்ள விடுதிகளுக்கு சென்று சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நேபாள் கேப்டன் சந்தீப் அங்கு வந்துள்ள ஆதாரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுமி ஒருவர் அளித்த புகாரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி சந்தீப் லமிசானே காத்மாண்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றம் உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் இவருடைய கேப்டன் பதவியும் பறிக்கப்படும். நேபாள் அணிக்காக சந்தீப் லமிசானே 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 69 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 44 டி20 போட்டிகளில் விளையாடி இவர் 85 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தற்போது சந்தீப் லமிசானே கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ளார். இவர் ஜமைக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு சிபிஎல் தொடரில் இவர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: இரண்டு தோல்விகளை கண்டு கவலையில்லை.. தினேஷ் கார்த்திக் இதனால்தான் ஆடவில்லை - ரோகித் ஷர்மா