ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 72 ரன்கள் விளாசினார். அடுத்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷன்கா மற்றும் குஷால் மெண்டீஸ் ஆகியோர் சிறப்பாக அரைசதம் கடந்தனர். இதனால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 


இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியாவின் தோல்வி தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் சரியாக ரன்களை சேர்க்கவில்லை. அப்போது விக்கெட்களை தொடர்ந்து இழந்து கொண்டிருந்தோம். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம். 


நேற்றைய போட்டியில் 10 முதல் 12 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். ஒரு சில நேரங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது வழக்கம். எங்களுடைய மிடில் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் களமிறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதன்காரணமாக தினேஷ் கார்த்திக் வெளியே உள்ளார். இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தததால் நாங்கள் கவலைப்பட தேவையில்லை. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நிறையே டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.






டி20 உலகக் கோப்பைக்கான அணி 90%வரை உறுதியாகிவிட்டது. இருப்பினும் ஒரு சில சிறிய மாற்றங்களை நாங்கள் செய்ய வேண்டும். அணியில் பல தரமான வீரர்கள் உள்ளனர். இதனால் எந்தவித குறைபாடும் அணியில் தற்போது இல்லை ” எனத் தெரிவித்துள்ளார். 






ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் 4 சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக இன்று நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோகும். அத்துடன் இந்திய அணி தொடரிலிந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 பிரிவில் இந்திய அணி அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.




மேலும் படிக்க:மீண்டும் வைரலாகும் ஜவகல் ஸ்ரீநாத்.. கும்ப்ளேவுக்காக 3 வைடு வீசினார்... எதற்காக அது நடந்தது தெரியுமா?