WTC இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு, மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் அணியில் இருந்து சேதேஷ்வர் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரை நீக்கியுள்ளது தேர்வர்கள் குழு.


சிறந்த வாய்ப்பை நழுவவிட்டுள்ளது தேர்வுக்குழு 


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் நீக்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தேர்வுக் குழுவின் அணுகுமுறையில் திருப்தி அடையவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் இளம் கிரிக்கெட் வீரர்களை சோதனை செய்யவும், WTC-யின் அடுத்த சுழற்சியை மனதில் வைத்து மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும் சிறந்த வாய்ப்பாக இருந்தது, ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ள வில்லை என்றார் கவாஸ்கர்.



இளம் வீரர்களை சோதனை செய்திருக்கலாம்


"கிரிக்கெட் வீரர்களின் அடுத்த கட்டத்தை முயற்சி செய்து பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. ஏதாவது ஒரு சோதனை செய்திருக்கக்கூடிய சுற்றுப்பயணம் என்று ஒன்று இருந்தால் அது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் தான். அவர்கள் இப்போது முன்பிருந்த அளவுக்கு பெரிய சக்தியாக இல்லை. எனவே, இளம் வீரர்களின் திறனை கண்டறியும் சரியான வழியாக இது இருந்திருக்கும்" என்று கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டுடேவிடம் கூறினார்.


அவர் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு வீரர் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி பேசுகிறார் என்பது தெளிவாகிறது. அவர்கள் பார்டர் கவாஸ்கர் டிராபி, ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, என இடைவிடாமல் கிரிக்கெட் ஆடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: World Cup Qualifiers: முன்னாள் உலக சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே..! வெ. இண்டீஸ் பரிதாப தோல்வி..!


மூத்த வீரர்களுக்கு ஓய்வு அழித்திருக்கலம்


"WTC போய்விட்டது, நாம் அதனை தவறவிட்டோம், ஆனால் அடுத்த பெரிய விஷயம் ODI உலகக் கோப்பை. இந்த நிலையில் மூத்த வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முழுமையான இடைவெளி கொடுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புவேன். 50 ஓவர் வடிவத்தையும் ஒருவேளை T20 களையும் மட்டும் இப்போது பார்க்கலாம்.


மூத்த வீரர்களுக்கு ஓய்வு


தற்போதைக்கு அவர்கள் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் முதல் இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மேலும் காயம் தொடர்பான இடைவேளையைத் தவிர, அவர்களுக்கு உண்மையில் நீண்ட இடைவெளிகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கு ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து முழுமையான இடைவெளி கொடுக்கலாம். 50 ஓவர் உலகக் கோப்பையில் யார் விளையாடுவார்கள் என்பது உறுதி. ஷமிக்கு ஒரு இடைவெளி கொடுத்தது போல, மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கலாம்" என்று கவாஸ்கர் கூறினார்.



வார்ம் அப் போட்டிகள் ஆடும் திட்டம்


முதல் டெஸ்ட் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் இந்திய அணியின் வார்ம்-அப் கேம்களை விளையாடுவதற்கான இந்திய அணியின் திட்டம் குறித்தும் கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். "ஜூலை இறுதி வரை அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். இந்த அணி ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வார்ம்-அப் போட்டிகளுக்குச் செல்லப் போகிறது. எனவே அவர்களுக்கு 20 நாள் இடைவெளி மட்டுமே உள்ளது. ஏன் ஒரு 40 நாட்கள் கொடுக்கக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.


"இந்த மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம், மூத்த வீரர்களைப் பற்றி புதிதாக எதுவும் செய்தி சொல்லப்போவதில்லை. WTC இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்பில், அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு அளிக்கப்படுவார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால் இப்போது கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு நழுவிவிட்டது" என்று கவாஸ்கர் கூறினார்.  கரீபியன் தீவுகளில் இந்தியா இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.