கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உலகக்கோப்பையை வெல்வது கனவாக இருக்கும். அப்படி இந்தியாவின் முதல் உலகக்கோப்பை கனவு நனவாகி இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி


1975 ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு உலகக்கோப்பை போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அப்படியான அணியை கண்டால் மற்ற அணிகள் சற்று பயப்படவே செய்தன. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. 


இப்படியான நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஜூன் 9 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா,மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. 60 ஓவர் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெற்றது. 15 மைதானங்களில் மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றது. 




மாஸ் காட்டிய இந்தியா


8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஏ பிரிவில் பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணியும் இடம் பெற்றிருந்தது. லீக் ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் 5 வெற்றி, இந்தியாவுக்கு எதிரான ஒரு தோல்வியுடன் முதல் இடமும், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 2வது இடமும் பெற்று பி பிரிவில் அரையிறுதிக்கு நுழைந்தது. 


இதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்து அணிகளும் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்கு சென்றது. அதேசமயம் பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணியும் இறுதிப்போட்டிக்கு வர ஆட்டம் சூடுபிடித்தது. அனைவரும் ஹாட்ரிக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி தான் வெல்லும் என அடித்து சொன்னனர். 


இப்போட்டி ஜூன் 25 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட இந்திய அணியில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 38, மொகிந்தர் அமர்நாத் 26, சந்தீப் பாட்டில் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 54.4 ஓவர்களில் இந்திய அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


மேஜிக் காட்டிய இந்திய பவுலர்கள்


இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெறும் என ஒரு முடிவுக்கே வந்து விட்டனர். அங்கு தான் இந்திய அணியினர் மேஜிக் நிகழ்த்தினர். சரியான நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த அணியில் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டும் அதிகப்பட்சமாக 33 ரன்களை விளாசினார். ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


இதன்மூலம் இந்திய அணி முதல் உலக்கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட்டது. அந்த தருணத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. இன்றோடு அந்த நாள் உருவாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன்பின்னர் தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியிருந்தது, மேலும் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மையப்படுத்தி 83 என்ற படமும் எடுக்கப்பட்டு  2021 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.