டி.என்.பி.எல் தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்த நெல்லை அணி,  புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

டிஎன்பில் தொடர்:

உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தற்போது வரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முதல் நான்கு இடங்களை உறுதி செய்ய அனைத்து அணிகளும் கடுமையாக மோதி வருகின்றன.

நெல்லை அபார வெற்றி:

தொடரின் 14வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய பாபா அபரஜித் அந்த அணியின் சார்பாக அதிகபட்சமாக 79 ரன்களை குவித்தார். ஆனால், இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்கள் முடிவிலேயே 160 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் 61 பந்துகளில் 104 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் நெல்லை அணி பதிவு செய்த நான்காவது வெற்றி இதுவாகும்.

மதுரை மிரட்டலான வெற்றி:

நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சேலம் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 19.4 ஓவர்களிலேயே சேலம் அணி வெறும் 98 ரன்களை மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணி 13 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த மதுரை அணி நடப்பு தொடரில் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
நெல்லை ராயல் கிங்ஸ் 5 4 1 8
திண்டுக்கல் டிராகன்ஸ் 3 3 0 6
லைகா கோவை கிங்ஸ் 4 3 1 6
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 2 3 4
Siechem மதுரை பாந்தர்ஸ் 3 1 2 2
சேலம் ஸ்பார்டன்ஸ் 4 1 3 2
திருப்பூர் தமிழன்ஸ் 3 1 2 2
திருச்சி 3 0 3 0

நெல்லை ஆதிக்கம்:

நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வென்று நெல்லை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.  அதைதொடர்ந்து தலா 3 வெற்றிகளுடன் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சேப்பாக் அணி 3 தோல்விகள்,  2 வெற்றிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய அணிகள், தலா ஒரு வெற்றியுடன் முறையே 5 முதல் 7வது இடங்களை பிடித்துள்ளன. இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத திருச்சி அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இன்றைய போட்டிகள்:

டி.என்.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சேலத்தில் 3.15-க்கு தொடங்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் மோதுகின்றன. மாலை 7.15-க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் திருப்பூர் மற்று திருச்சி அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.