ICC Cricket World Cup Qualifiers 2023: இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. 


சனிக்கிழமை  அதாவது ஜூன் 24ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் தோல்வியை சந்தித்தது .


ஜிம்பாப்வே அபாரம்:


இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் சீராக ரன்களும் குவித்து வந்தது. குறிப்பாக ஜிம்பாப்வே அணியின் ராஸா மற்றும் ரயான் புர்ல் அரைசதம் விளாசி அசத்தினர். ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வைன் 47 ரன்கள் சேர்த்து அரைசத்தினை தவறவிட்டார். இதனால் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்  3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களில் வழுவாக காணப்பட்டது ஆனால் அதன் பின்னர்  8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களுக்குச் சரிந்து. இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்குச் சுருண்டது . இதனால் ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


வெஸ்ட் இண்டீஸ் தோல்வி:


ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராஸா 58 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து விண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கீமோ பால் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஜிம்பாப்வேக்கு எதிராக ஏழு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் தோல்வி இதுவாகும். மேலும்,  இதுவரை 50  ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இது ஜிம்பாப்வே அணிக்கு  11வது வெற்றியாகும். 


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும்,  வெஸ்ட் இண்டீஸ் அணி  சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. நெட் ரன்ரேட்டில்  (NRR) முன்னிலையில் உள்ள ஜிம்பாப்வே (ஆறு) மற்றும் நெதர்லாந்து (நான்கு) என் வெஸ்ட் இண்டீஸ் நான்கு புள்ளிகளுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.


 ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் நிலைக்கு முன்னேறும், அங்கு அவர்கள் மற்ற குழுவிலிருந்து வரும் அணிகளுடன் விளையாடுவார்கள். இந்த சுற்று முடிவில் முன்னிலை வகிக்கும் அணிகள் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கும் கோப்பைக்கான இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும்.


வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இறுதிக் லீக் ஆட்டத்தில் திங்கள்கிழமை  அதாவது ஜூன் 26ம் தேதி நெதர்லாந்தையும், திங்கள்கிழமை ஜிம்பாப்வே அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.