இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்தது.
சுழல் சூறாவளி:
இந்த நிலையில், 1 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், இதையடுத்து 3வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மீது ஜடேஜா, அஸ்வின் சுழல் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி தங்களது விக்கெட்டுகளை படிப்படியாக பறிகொடுத்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ட்ராவிஸ் ஹெட் அஸ்வின் சுழலில் அவுட்டாக, அடுத்து ஜடேஜா லபுசேனேவை 35 ரன்களிலும், கடந்த இன்னிங்சில் அசத்திய ஹாண்ட்ஸ்கோம்பை டக் அவுட்டாக்கியும் வெளியேற்றினர். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பே அளிக்காமல் பாட் கம்மின்சை டக் அவுட்டாக்கியும், நாதன் லயனை 8 ரன்களிலும், கடைசியாக குகென்மனை டக் அவுட்டாக்கியும் வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணியை 113 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணியில் ஜடேஜா மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
புதிய சாதனை:
அதாவது, 12.1 ஓவர்கள் மட்டுமே வீசிய ஜடேஜா 1 ஓவரை மெய்டனாக வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இது ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதே ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சு ஆகும். அதை தற்போது ஜடேஜா முறியடித்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன்மூலம் இந்த டெஸ்டில் ஜடேஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது 3வது முறையாகும்.
ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணிக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு ஆடி வருகிறது.
ஜடேஜா இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 259 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் சிறப்பாக 42 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி 171 ஒருநாள் போட்டியில் ஆடி 189 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும், 210 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 3 சதம், 18 அரைசதங்களுடன் 2619 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 13 அரைசதங்கள் உள்பட 2447 ரன்களையும், டி20 போட்டிகளில் 367 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 2502 ரன்களையும் குவித்துள்ளார்.
மேலும் படிக்க: IND vs AUS 2nd Test: மீண்டும் சூறாவளியாய் மிரட்டிய ஜடேஜா.. 113 ரன்களுக்கு சுருண்ட ஆஸி., இலக்கை ஈஸியாக எட்டுமா இந்தியா?
மேலும் படிக்க: Ranji Trophy Final: அபார பவுலிங்.. அசத்தல் பேட்டிங்..! பெங்காலை வீழ்த்தி ரஞ்சிக்கோப்பையை வென்றது சவுராஷ்ட்ரா..!