இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான போட்டியாக மாறியுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டரை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் நாதன் லயன் அடுத்தடுத்த விக்கெட்டுகள் குவிக்க, விராட் கோலி மட்டும் கொஞ்சம் நிலைத்து ஆடிய நிலையில், அவரும் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். அவரை கடந்த டெஸ்டில் அறிமுகமான டாட் மர்ஃபி வீழ்த்தியது போல, இந்த டெஸ்டில் அறிமுகம் ஆன குஹ்னேமான் ஆட்டமிழக்க செய்துள்ளார். டாப் ஆர்டர் சொதப்பிய பின் இந்த டெஸ்டிலும், அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூட்டணிதான் காப்பாற்றியது. இருப்பினும் ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெரும்பகுதி ஏறுமுகத்தில் இருந்தது சவாலான போட்டிக்கு வழி வகுத்துள்ளது. ஒரே ஒரு ரன் பின் தங்கிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அலைமோதிய டெல்லி ரசிகர்கள்
ஆஸ்திரேலியர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை விரைவாகத் தொடங்கிய நிலையில், காயத்தால் விலகிய டேவிட் வார்னருக்குப் பதிலாக உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங்கைத் தொடங்க டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆட, கவாஜா ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த லபுஷ்சாஃனேயும் அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி வித்யாசமான அணுகுமுறையால் நல்ல நிலையை எட்டியது. இன்று காலை இருவரும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகின்றனர். இந்த போட்டியை காண புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்திலும் கூட்டம் அலைமோதியுள்ள நிலையில் அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் இருந்தும் ஸ்லெட்ஜிங் வந்தன.
சான்ட் பேப்பர் கோஷம்
2018 ஆம் ஆண்டில் பந்தை சேதப்படுத்திய (ball tampering) சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் நீண்ட கால தடைகளை எதிர்கொண்டதை குறிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பீல்டர்களை "சான்ட் பேப்பர்" கோஷங்களுடன் ரசிகர்கள் கேலி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த சர்ச்சையின்போது, ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து எதிர்மறையான கருத்துகள் மட்டும் இல்லை, இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் வார்னரை ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. உஸ்மான் கவாஜாவுடன் முதல் நாள் இன்னிங்ஸின் போது களமிறங்கும்போது கூட டெல்லி ரசிகர்கள் அவருக்கு ஆரவார வரவேற்பு தந்தனர்.
மீட்பர்கள் கூட்டணி
இரண்டாவது டெஸ்டின் தீவிரமான இரண்டாவது நாளில் நாதன் லயன் 5/67 என்ற எண்ணிக்கையில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் முன்னிலை பெற்றனர். ஆனால் ஆக்சர் 74) மற்றும் அஷ்வின் (37) இடையேயான முக்கியமான எட்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் டெல்லியில் 139/7 என்று சரிந்த இந்தியாவை மீட்டு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்னை நெருங்க உதவியது. கேப்டன் பாட் கம்மின்ஸ் இறுதியாக இரண்டாவது புதிய பந்தில் இந்த ஜோடியை உடைத்தார். மாற்று வீரர் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் ஆட்டமிழந்தார். டாட் மர்பி பந்தில் அக்ஸர் ஆட்டமிழக்க, சக சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமான் இந்திய இன்னிங்ஸை முடித்தார்.