இந்திய கிரிக்கெட்டின் உள்நாட்டு தொடரிலே மிகவும் முக்கியமான தொடர் ரஞ்சிக்கோப்பைத் தொடர். வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்கவும், தங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் முக்கியமான தொடராக விளங்குகிறது. புகழ்பெற்ற ரஞ்சித்தொடர் தற்போது நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.


ரஞ்சிக்கோப்பை:


இதில், பெங்கால் – சவுராஷ்ட்ரா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி முதலில் பநதுவீச்சைத் தேர்வு செய்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்சில் சொதப்ப முன்னணி விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஷபாஸ் அகமது, அபிஷேக் போரெல் மட்டும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். ஆனாலும், பெங்கால் அணி 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 2வது இன்னிங்சைத் தொடங்கிய சவுராஷ்ட்ரா அணிக்கு ஹர்விக் தேசாய் சிறப்பான தொடக்கம் அளிக்க மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஜேக்சன் 59 ரன்களும், வசவடா 81 ரன்களும், சிரக் ஜானி 60 ரன்களும், பிரேரக் 33 ரன்களும் எடுக்க அந்த அணி 404 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்துது.


பின்னர், 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணிக்கு தொடக்க வீரர்கள் சுமந்தகுப்தா 1 ரன்னிலும், அபிமன்யு 16 ரன்களிலும் ஆட்டமிழக்க மஜூம்தார் – கேப்டன் மனோஜ் திவாரி கூட்டணி சிறப்பாக ஆடியது. இருவரும் இணைந்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மஜூம்தார் 61 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் மனோஜ் திவாரியும் 68 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மற்ற வீரர்கள் சொற்ப ரனகளில் ஆட்டமிழக்க பெங்கால் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.


சாம்பியன் பட்டம் வென்ற சவுராஷ்ட்ரா:


இதனால், சவுராஷ்ட்ரா அணிக்கு 14 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 14 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்ட்ரா அணி 1 விக்கெட்டை இழந்து இழக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சவுராஷ்ட்ரா அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் சவுராஷ்ட்ரா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை இறுதியில் மோதியது. அப்போது, சவுராஷ்ட்ரா அணி பெங்கால் அணியை வீழ்த்தி முதன்முறையாக ரஞ்சிக்கோப்பையை கைப்பற்றியது.


சவுராஷ்ட்ரா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் உனத்கட் திகழ்ந்தார். அவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.