இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


500 விக்கெட்டுகள்:


365 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை போல இந்த டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின், ஜடேஜா தங்கள் சுழல் மாயாஜாலம் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.


இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களை குவித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களை எடுத்தது.  முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், மெக்கென்சி விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.


அஸ்வின் - ஜடேஜா:


இதன்மூலம், சுழல் ஜாம்பவான்களாக திகழும் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து 500 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் என கூட்டாக இணைந்து 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது கூட்டணி என்ற சாதனையை படைத்துள்ளனர்.


இதற்கு முன்பு அனில் கும்ப்ளே – ஹர்பஜன்சிங் ஆகிய இருவரும் இணைந்து 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அனில் கும்ப்ளே 281 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


54 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் படைத்த சாதனையை 49 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் – ஜடேஜா படைத்துள்ளனர். இவர்களில் அஸ்வின் 274 விக்கெட்டுகளையும், ஜடேஜா 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களை போல 42 டெஸ்ட் போட்டிகளில் 368 விக்கெட்டுகளை பிஷன்பேடி – பி.எஸ். சந்திரசேகர் 368 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். பிஷன்பேடி 184 விக்கெட்டுகளையும், சந்திரசேகர் 184 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.


2000 முதல் 2010 காலகட்டங்களில் இந்திய அணிக்கு சுழல் ஜாம்பவான்களாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் திகழ்ந்தது போல, தற்போது அஸ்வின் – ஜடேஜா தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு திகழ்கின்றனர்.


மேலும் படிக்க: Fastest Test 100: ரோகித் சர்மாவின் மிரட்டல் அடி.. டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய அணி.. குவிந்த சாதனைகள்


மேலும் படிக்க: IND Vs WI Test: சூடுபிடித்த ஆட்டம்.. வெற்றிக்காக மல்லுக்கட்டும் இந்தியா - மேற்கிந்திய தீவுகள்..289 ரன்கள், 8 விக்கெட்டுகள்