இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்னும் 289 ரன்கள் அவசியமாக உள்ளது.


255 ரன்களுக்கு ஆல்-அவுட்:


போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை சேர்த்திருந்தது. இதையடுத்து நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி நான்காவது நாளில் கூடுதலாக வெறும் 26 ரன்களை மட்டுமே சேர்த்து 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


இந்திய அணி பேட்டிங்:


இதையடுத்து, 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரரான் இஷான் கிஷன் வெறும் 34 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து, இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்து இருந்த போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.


தடுமாறும் மேற்கிந்திய தீவுகள் அணி:


தொடர்ந்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. கேப்டன் பிராத்வெயிட் 28 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மெக்கன்ஸி 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலேயே அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை சேர்த்துள்ளது. கடைசி நாளான இன்று அந்த அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது. அதேநேரம், இந்திய அணி வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்டுகள் எடுக்க வேண்டியுள்ளது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, கோலியின் அபார சதம் மற்றும் ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியோ 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.