ஆண்கள் கிரிக்கெட் அணியை போல பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல துடிப்புள்ள இளம் வீராங்கனைகள் அந்த அணிக்காக ஆடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் 19 வயதே ஆன ஆயிஷா நசீம். 19 வயதே ஆன ஆயிஷாவின் அறிவிப்பு கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது.


18 வயது வீராங்கனை ஓய்வு


தனது கிரிக்கெட் வாழ்க்கையை தற்போதுதான் தொடங்கியுள்ள ஆயிஷா, சர்வதேச கிரக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இதுதொடர்பாக அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருப்பதாவது, “நான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். நான் எனது வாழ்க்கையை இஸ்லாம் மார்க்கம் கூறியதன் அடிப்படையில் வாழ விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த மற்ற வீராங்கனைகள் கிரிக்கெட் ஆடி வருகின்றனர். ஆனால், திடீரென ஆயிஷா  இந்த காரணத்திற்காக ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


அதிரடி பேட்டிங்:


2004ம் ஆண்டு அப்போதபாத்தில் பிறந்த ஆயிஷாவிற்கு பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு லெவன் அணிக்காக ஆடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக அறிமுகமானார்.  அதன்பின்பு, பாகிஸ்தான் அணியில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.


வலது கை வீராங்கனையான இவர் சிறந்த அதிரடி பேட்டிங் வீராங்கனை. இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 30 டி20 போட்டிகளில் ஆடி 369 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 45 ரன்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தில் 25 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்கள் விளாசினர். 4 ஒருநாள் போட்டிகளில் ஆடி 33 ரன்கள் எடுத்துள்ளார்.


பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால், இளம் வீராங்கனைகளை கட்டமைக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. அதனால், ஆயிஷாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது. இந்த நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆயிஷாவின் முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


ஆயிஷா நசீம் தன்னுடைய ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Fastest Test 100: ரோகித் சர்மாவின் மிரட்டல் அடி.. டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய அணி.. குவிந்த சாதனைகள்


மேலும் படிக்க: IND Vs WI Test: சூடுபிடித்த ஆட்டம்.. வெற்றிக்காக மல்லுக்கட்டும் இந்தியா - மேற்கிந்திய தீவுகள்..289 ரன்கள், 8 விக்கெட்டுகள்