இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 டி20 போட்டியில் தோற்று 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் செயல்பாடு என்பது எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே உண்மை ஆகும்.
கனேரியா விமர்சனம்:
இந்திய அணியின் இந்த செயல்பாடு குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான டேனிஷ் கனேரியா இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “ தற்போதைய இந்திய அணி ஏன் போதியளவு நோக்கமில்லாமல் உள்ளனர்? ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். ஏனென்றால், ஆஷிஸ் நெஹ்ரா செயல்பாடு அப்படி இருந்தது.
தகுதியற்றவர்:
இந்திய அணி டி20 போட்டிகளில் இன்னும் உறுதியான நோக்கத்துடன் ஆட வேண்டும். பயிற்சியாளர் அதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ராகுல் டிராவிட் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமே இல்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக இருக்க ராகுல் டிராவிட் தகுதியற்றவர். அவர் மிகவும் மெதுவாக உள்ளார்.
அதேசமயம், ஆஷிஸ் நெஹ்ராவை பார்த்தால் அவர் களத்தில் தொடர்ச்சியாக செய்திகளை அனுப்பிக் கொண்டே இருப்பார். அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.” இவ்வாறு கனேரியா கூறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 10 ஆண்டுகள் ஆடிய கனேரியா டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்திய அணியின் செயல்பாடு:
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராகுல் டிராவிட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவரது தலைமையில் இந்திய அணி களம் கண்ட ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என எந்தவொரு பெரிய தொடரையும் வெல்லவில்லை. அவரது பயிற்சியின் கீழ் மட்டும் விராட்கோலி, ரோகித்சர்மா, ஷிகர்தவான், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் என கேப்டன்கள் பலரும் இந்திய அணிக்காக ஆடிவிட்டனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர்ந்து ரோகித், கோலிக்கு அவர் ஓய்வு அளித்த சம்பவமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ராகுல் டிராவிட்டின் செயல்பாடு குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் முன்னாள் வீரரும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்திய அணியின் செயல்பாடு என்பது திருப்திகரமாக இல்லாததால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!
மேலும் படிக்க: Surya Kumar Yadav: "ஒரு நாள் போட்டியில் எனது ஆட்டம் மோசமாக உள்ளது…" ஓப்பனாக ஒப்புக்கொண்ட சூரியகுமார்!