இந்திய அணி முதல் இரண்டு டி20-க்களை இழந்த பிறகு, மூன்றாவது T20I இல் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் ஹீரோவாக உருவெடுத்தார். 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த சூர்யா, போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, அவரது ODI ஃபார்ம் குறித்து வெளிப்படையாக பேசினார். 50-ஓவர் வடிவத்தில் அவரது ரன் குவிப்பு ஈர்க்கக்கூடியதாக இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இந்திய அணி வெற்றி
நேற்று (செவ்வாய்) கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் தோற்றால் இந்திய அணி தொடரை இழக்கும் தருவாயில் இருந்த நிலையில், மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை எளிதாக வெற்றி பெற செய்தார். ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சூர்ய குமார், "உண்மையைச் சொல்வதென்றால், எனது ஒரு நாள் ஆட்டம் முற்றிலும் மோசமாக உள்ளது, அதை ஒப்புக் கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை" என்று கூறினார்.
கடைசி 15 ஓவர்களில் ஆட அறிவுரை
"ரோஹித் (சர்மா) மற்றும் ராகுல் (டிராவிட்) ஆகியோர், இது நான் அதிகம் விளையாடாத ஃபார்மட், எனவே இன்னும் கொஞ்சம் விளையாடினால்தான் சிறப்பாக மாற முடியும், என்று என்னிடம் சொன்னார்கள். கடைசி 10-15 ஓவர்களில் நான் பேட்டிங் செய்தால் அணிக்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க சொன்னார்கள். பொறுப்பை எப்படி வாய்ப்பாக மாற்றுவது என்பது இப்போது என் கையில் உள்ளது" என்று சூர்யகுமார் மேலும் கூறினார்.
சூர்யகுமாரின் அதிரடி ஃபார்ம்
சூர்யகுமாரின் அதிக ரிஸ்க், 360 டிகிரி பேட்டிங் டி20 போட்டிகளில் அவருக்கு நிறைய பாராட்டுகளையும் வெற்றிகளையும் பெற்றுத்தந்தது. 51 டி20 போட்டிகளில் ஆடி, 49 இன்னிங்ஸ்களில் களம் இறங்கியுள்ள அவர், 45.64 சராசரி மற்றும் 174.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,780 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இந்த வடிவத்தில் மூன்று சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 2022 இல் 'ஐசிசி T20I ஆண்டின் சிறந்த வீரர்' விருதை வென்றார், மேலும் இந்த வடிவத்தில் பல நாட்களாக உலகளவில் நம்பர் 1 பேட்டராக உள்ளார்.
பழக்கமில்லாத ஃபார்மட்
"நாங்கள் T20 வடிவில் அதிகம் விளையாடி வருகிறோம், அதனால் எனக்குப் பழக்கமாகிவிட்டது. ஒரு நாள் என்பது நான் அதிகம் விளையாடாத ஒரு ஃபார்மேட், அதை நான் மிகவும் சவாலான வடிவமாகக் கருதுகிறேன். கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல கொஞ்ச நேரம் பேட் செய்ய வேண்டும். இடையில் கொஞ்சம் வேகப்படுத்த முயற்சிக்கிறோம். இறுதியில் டி20 அணுகுமுறையை கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே அணி நிர்வாகம் என்னிடம் சொன்னதை செயல்படுத்த முயற்சிக்கிறேன். இறுதியாக இறங்கி எனது ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்," என்று அவர் கூறினார். சதம் காணாமல் போனது பற்றி பேசிய சூர்யகுமார், மைல்கற்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்று கூறினார்.