Jailer Review in Tamil:  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். 


படத்தின் கதை 


நேர்மையாக இருக்கும் தனது போலீஸ் மகனுக்கு எதிரியால் ஆபத்து நேர்ந்தால், மீதம் இருக்கும் குடும்பத்தை காக்க, அப்பா என்ன செய்கிறார் என்பதே ஜெயிலர் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும். 


சிலை கடத்தல் மன்னனாக விநாயகன் குழு செயல்படுகிறது. அந்த கடத்திய சிலை அடங்கிய கண்டெய்னர் லாரி போலீஸ் அதிகாரி வசந்த் ரவியால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அவர் காணாமல் போகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகனை நேர்மையாக வளர்த்ததால் தான் வசந்த் ரவி இறந்ததாக குற்ற உணர்ச்சியில் பழிவாங்க ரஜினி புறப்படுகிறார். இதனால் குடும்பத்தினரை கொல்லும் முயற்சியில் வில்லன் கூட்டம் இறங்க , இந்த போராட்டத்தில் ரிட்டையர்ட் போலீஸ் ரஜினி எடுக்கும் அதிரடி ஆக்ஷன்களும், டிவிஸ்ட்களும் என இரண்டரை மணி நேரம் படமாக காட்சிப்படுத்தியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.


நடிப்பு எப்படி?


படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம் தான் என்றாலும், கிடைத்த கேப்பில் எல்லாம் ரம்யாகிருஷ்ணன்,  யோகிபாபு, விநாயகன், சுனில் ஸ்கோர் செய்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். தமன்னா நடிகையாகவே படத்திலும் வந்துள்ளார்.


படம் எப்படி?


அப்பா அல்லது குடும்பத்தை கொன்றவர்களை, கொல்ல முயற்சிப்பவர்களை ஹீரோ பழிவாங்குவது என்பது இந்திய சினிமாவில் சலித்துப்போன கதைகளில் ஒன்று. அதேசமயம் அதிசயமாக ஏதாவது ஒரு படத்தில் மகனை கொன்ற வில்லனை அப்பா பழி வாங்க நினைப்பது என்பது கதையின் ஒரு பாகமாவே வைக்கப்பட்டிருக்கும். இதில் அது மெயின் கான்செப்ட் ஆக வைத்து அதனை சிலை கடத்தல் தொடர்புடைய கதையாக அமைந்துள்ளது ரசிக்க வைத்துள்ளது. வழக்கமான தனது ஸ்டைல் உடன், ரஜினி ரசிகனாக ஃபேன் பாய் மொமண்ட் ஆக படத்தை அமர்க்களமாக கொடுத்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நெல்சன். 


இதனுடன் ரஜினியின் ஸ்டைலும், அனிருத்தின் ராக் மியூசிக்கும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும். காட்சிக்கு காட்சி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபு - ரஜினி இடையேயான காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், நிர்மலின் எடிட்டுங்கும் கதைக்கு தேவையான அளவை கச்சிதமாக செய்துள்ளது. இரண்டாம் பாதி நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.


"பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்துக்கு போயிடுவோம் போல", "படிச்சாலும், ரிட்டையர்ட் ஆனாலும் வீட்டுல மதிப்பு இல்ல", "சொன்னதுக்கு மேலயும், கீழேயும் இருக்க கூடாது. சொன்னபடி இருக்கணும்", "நான் தான் இங்க கிங்", "குழந்தைகள் கெட்டவங்க ஆகிட்டா பெத்தவங்க வாழ்க்கை நரகம் ஆயிடும்" என ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வசனங்கள் ரசிக்க வைக்கிறது. காவாலா, தலைவரு அலப்பறை பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.


ஆக மொத்தத்தில் நல்ல தியேட்டரில் "ஜெயிலர்" படம் பாருங்க..  "சூப்பர் ஸ்டார்" திருவிழாவை  உற்சாகமாக கொண்டாடுங்க...! தலைவரு நிரந்தரம்........