இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணியில் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார். 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக பந்துவீசி அசத்தி வந்தார். கடைசியாக அவர் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 


 


 நேற்று ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ”அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வரவேண்டும். அந்தவகையில் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தும் அளித்த என மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறேன். இந்த 23 ஆண்டு காலம் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி” எனப் பதிவிட்டிருந்தார். 


 






ஹர்பஜன் சிங் ஓய்விற்கு பிறகு வரும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அத்துடன் அவர் கடந்த 15ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவை சந்தித்த படமும் வேகமாக வைரலானது. இதனால் ஹர்பஜன் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பலரும் கூறி வந்தனர். 


 


இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பாக ஹர்பஜன் சிங் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து,”உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அரசியலில் சேர்வது தொடர்பாக இதுவரை யோசனை செய்யவில்லை. எனக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நான் இதுவரை அதை பற்றி பரிசீலிக்கவில்லை. இது பெரிய முடிவாக இருக்கும் என்பதால் நான் அதை மெதுவாக யோசித்து தான் எடுப்பேன். நான் அதற்கு தயாராக இருக்கிறேன் என்று உணர்ந்த பிறகு அந்த முடிவை எடுப்பேன். 


 






தற்போதைக்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களிலேயே நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அரசியலில் நுழைவது தொடர்பாக எந்தவித முடிவு எடுக்கவில்லை. அதை நான் எடுக்கும் போது அனைவருக்கும் நான் தெளிவாக அறிவிப்பேன். நானும் சித்துவும் இணைந்து எடுத்து கொண்ட படத்தை தற்போது பரப்பி நான் அரசியலில் இணைவதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை. நான் அரசியலில் வருகிறேன் என்றால் அனைவருக்கும் தெளிவாக தெரிவிப்பேன்” எனக் கூறியுள்ளார். 


 


கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் டெஸ்டில் 417 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்களையும் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் நான்காவது இடத்தில் உள்ளார்.


மேலும் படிக்க: ‛ஒற்றை காலில் ஆடு.. இல்லையா அணியில் இருந்து ஓடு’ இங்கிலாந்து கோச் கொடுத்த டாஸ்க்!