நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் பிரிவு இரண்டில் டர்ஹாம் அணிக்கு எதிராக சசெக்ஸ் கேப்டன் சேதேஷ்வர் புஜாரா தனது முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்.


புஜாரா சதம்


இந்திய அணியின் வலது கை ஆட்டக்காரரான புஜாரா 163 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 115 ரன்கள் எடுத்தார். அவர் 55வது ஓவரில் பிரைடன் கார்ஸின் பந்தில் 134 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். சாதத்தை எட்டும் முன் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து அதகளம் செய்தார். இங்கிலாந்து மண்ணில் புஜாராவின் ஃபார்ம் குறித்து புதிதாக கூற வேண்டியதில்லை.


இங்கிலாந்து மண்ணில் ஒற்றை ஆளாக பல இன்னிங்ஸ்களை நகர்த்தி சென்றுள்ளார். குறிப்பாக சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 35 வயதான அவர் கடந்த சீசனில் 5 சதங்கள் உட்பட 109.40 என்ற அற்புதமான சராசரியில் எட்டு போட்டிகளில் மட்டுமே 1094 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 



இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் ஃபாரம்


அதைத் தொடர்ந்து ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் 9 இன்னிங்ஸ்களில் 624 ரன்கள் குவித்து, மூன்று சதங்களையும் அடித்தார். இந்த நிலையில் இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் நேராக இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலியா உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்து மண்ணில் புஜாராவின் இந்த ஃபார்ம், இந்திய அணி பேட்டிங்கிற்கு தூணாக விளங்கும் என்பதால் கோப்பையை வெல்வதில் ஒரு படி முன்னிலையில் சென்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: கடந்த ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என புகார்.. ஈபிஎஸ்ஸை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி..!


பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி


புஜாரா இதே ஃபார்மை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இடையில் ஒன்றிரண்டு வருடங்கள் ஃபார்மில் இல்லாமல் இருந்து, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இந்திய அணிக்காக தனது 19வது டெஸ்ட் சதத்தை அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். இருப்பினும், இந்திய மண்ணில் சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் புஜாரா, தனது பங்களிப்பை வழங்கத் தவறினார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறு இன்னிங்ஸ்களில் 28 என்ற குறைவான சராசரியில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தார், இதில் ஒரு அரை சதம் அடங்கும். பொதுவாகவே அந்த தொடரில் மூன்று போட்டிகள் பவுலிங் பிட்சாக அமைந்ததால் யாருமே பெரிதாக ஸ்கோர் செய்யாததால் அது ஒரு பிரச்னையாக தெரியவில்லை.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்


ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாராவின் பங்களிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணிக்காக WTC இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார், "இந்திய அணிக்காக WTC இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவு. நாங்கள் தகுதி பெற்றவுடன், அதை நோக்கிப் பார்ப்போம் என்று நம்புகிறோம்", என்றார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 டெஸ்டில் 47.29 சராசரியில் 993 ரன்கள் எடுத்து நன்றாகவே செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. WTC இறுதிப் போட்டியை நடத்தும் இங்கிலாந்தில், சேட்டேஷ்வர் புஜாரா 15 டெஸ்டில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் உட்பட 829 ரன்களைக் குவித்துள்ளார்.