நடப்பாண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக சர்வதேச அரங்கில் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழா என்பதால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய தொடராக உள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் தொடர்:


நடப்பாண்டிற்கான உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஐ.பி.எல். தொடருக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளது. இதற்கேற்ற வகையில் போட்டி அட்டவணைகளை பி.சி.சி.ஐ. தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளதாகவும் கூறப்படுகிறது.






உலகக்கோப்பைக்கு ஒத்திகை:


அதற்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி ஆடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் நிறைவு பெற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்த தொடர் தொடங்க உள்ளதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா? அல்லது சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதால் அவர்களும் பங்கேற்பார்களா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. மேலும், நீண்ட காலமாக காயத்தில் உள்ள பும்ரா, விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் ரிஷப்பண்ட் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


வழக்கமாக சிறிய அணிகளுக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், உலகக்கோப்பை தொடர் நடைபெற இன்னும் சில மாதங்களே இருப்பதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவது சாத்தியமற்றது என்றும் கூறப்படுகிறது.


இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித்சர்மா, விராட்கோலி, ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், சாஹல், அக்‌ஷர் படேல், சுப்மன்கில், இஷான்கிஷான் ஆகியோர் தற்போது ஐ.பி.எல். தொடரில் ஆடி வருகின்றனர்.


மேலும் படிக்க: KKR vs RCB, IPL 2023 LIVE: டாஸ் வென்ற ஆர்.சி.பி...! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கொல்கத்தா..?


மேலும் படிக்க: KKR vs RCB: கெத்து காட்டும் பெங்களூரு.. தடுமாறும் கொல்கத்தா.. இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?