முன்னாள் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், தனது மகனுடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்புத்தியிருக்கிறது.


ரிஷப் பந்த் விபத்து


கடந்த ஆண்டு இறுதியில், ரிஷப் பந்த் கார் விபத்துக்குள்ளான செய்தி, கிரிக்கெட் உலகை உலுக்கியது. விபத்தின் அளவு பெரிதாக இருந்தபோதிலும், ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார், இப்போது அவர் குணமடைந்து வந்து மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பும் பாதையில் இருக்கிறார். அதே போல, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமாரும் மீரட்டில் விபத்தில் சிக்கினார்.



பிரவீன் குமார் விபத்து 


முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாரின் கார், மீரட்டில் உள்ள கமிஷனர் குடியிருப்பு அருகே வேகமாக வந்த சிறிய லாரி மீது மோதியது. பிரவீன் குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார். விபத்தைத் தொடர்ந்து, மக்கள் விரைவாக திரண்டனர், அவர்கள்தான் குற்றம் சாட்டப்பட்ட டிரைவரைப் பிடித்து வைத்தனர். தகவல் கிடைத்ததும் சிவில் லைன் போலீஸ் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், காரை மோதிய லாரியின் டிரைவரை கைது செய்து அழைத்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Udhayanidhi Stalin: விஜய், அஜித்துக்கு ஒரு நியாயம்.. உதயநிதிக்கு ஒரு நியாயமா? - மாமன்னன் படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்!


இருவரும் நன்றாக உள்ளனர் 


செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் தனது லேண்ட்ரோவர் டிஃபென்டர் வாகனத்தில் பாண்டவ் நகரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது பிரவீன் தனது மகனுடன் வந்துகொண்டிருந்தார், அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. கார் உயர் பாதுகாப்பு வகையை சேர்ந்ததாலும், ஏர் பேக் வசதிகள் இருந்ததாலும் இருவருக்கும் எதுவும் ஆகவில்லை. விபத்தில் பிரவீனும் அவரது மகனும் பத்திரமாக உள்ளனர் என சிஓ தெரிவித்தார். கேன்டர் ஓட்டுநரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பியதாக நகர எஸ்பி பியூஷ் குமார் தெரிவித்தார். 



ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த பிரவீன் குமார்


பிரவீன் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டில், மீரட்டில் தனது சொந்த ஊர் திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பின் போது, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் 'ஓபன் ஜீப்'பில் இருந்து கீழே விழுந்தார். 2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் அவர் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்தார். ODI ஸ்பெஷலிஸ்ட் ஆன அவர் 68 ODI போட்டிகளில் பங்கேற்று 77 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஆறு டெஸ்ட் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடி முறையே 27 மற்றும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் காயமின்றி தப்பியதில், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.