மாமன்னன் படம் பார்த்த பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அதில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான காட்சிகள் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் மாமன்னன் படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என்ற பேச்சும் ஒரு பக்கம் உலாவி வருகிறது. படத்தின் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், எதிர்மறையான கருத்துகளும் பரவி வருகிறது. இப்படியான நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜூ முருகன் என பலரும் மனம் விட்டு பாராட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் படத்தில் இடம் பெற்ற நெஞ்சமே நெஞ்சமே பாடலை இயக்குநர் செல்வராகவன் பாராட்டியிருந்தார். இப்படியாக நாளுக்கு நாள் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. அதேசமயம் மாமன்னன் படத்தின் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான காட்சிகள் இணையவாசிகள் இடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக பிரபலங்கள்
பொதுவாக பல லட்சம் ரசிகர்களை கொண்ட பிரபலங்கள் அவர்களுக்கு முன்னுதாரணம் ஏற்படுத்தும் காட்சிகள் நடிக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக இருக்கும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை திரையில் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை அடிக்கடி எழும். இதே கோரிக்கை சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படத்துக்கும் எழுந்தது. அதேபோல் தான் பைக் ஓட்டும் காட்சிகளில் நடிக்கும் பிரபலங்கள் ‘ஹெல்மெட்’ அணிந்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிகில் படத்தில் நடிகர் விஜய், ஹெல்மெட் அணியாமல் சாலையில் ஒரு வழிப்பாதையில் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அதேசமயம் நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றது. இதனால் விஜய் இதுபோன்ற காட்சிகளில் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இப்படியான நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காட்சியில் கூட ஹெல்மெட் அணியாமல் தான் இருக்கிறார். அவர் நடிகர், எம்.எல்.ஏ. மட்டுமல்ல, இப்போது அமைச்சராகவும் இருக்கிறார். அப்படி இருக்கும்போது நிச்சயம் ஒரு விஷயத்தை ரசிகருக்கு அறிவுறுத்தும் பொறுப்பு அவருக்கு உள்ளது எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.