ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில் தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. என்ன தான் தொடர் முழுவதும் நடைபெற்ற லீக் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை மட்டும் அல்லாமல் வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதில் இருந்து இன்னும் கூட வீரர்கள் மீண்டு வரவில்லை. அதே நேரம் இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறினார்கள். அதேபோல், ஒரு கேப்டனாக இந்திய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய ரோகித் சர்மாவையும் பாராட்டினார்கள்.
இந்நிலையில், ஒரு கேப்டனாக ரோகித் சர்மா ஒவ்வொரு வீரரையும் புரிந்து வைத்திருப்பார் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
ரோகித்தின் தனித்துவமான ஸ்டைல்:
இது தொடர்பாக அஸ்வின் பேசுகையில், ”உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு நாங்கள் மிகுந்த வலியில் இருந்தோம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்கே கடினமாக இருந்தது. இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. ஒவ்வொரு வீரருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையை வெற்றிபெறாவிட்டாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர். இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அனைவருமே எம்.எஸ்.தோனி தான் சிறந்த கேப்டன் என்று சொல்வார்கள்.
ஆனால் ரோஹித் சர்மா மிகவும் சிறப்பான ஒரு மனிதர். அவருக்கு என்று தனித்துவமான ஸ்டைல் ஒன்று இருக்கிறது. அதன்படி தான் கேப்டன்சியை மேற்கொள்கிறார்.
தூக்கத்தை தொலைத்துவிட்டு ஆலோசிப்பார்:
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஒவ்வொரு வீரரையும் புரிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு வீரருக்கும் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது அவருக்குத் தெரியும். ஒரு வீரர் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல முயற்சிகளை அவர் எடுக்கிறார். தூக்கத்தை தொலைத்துவிட்டு ஆலோசனையில் ஈடுபடுவார்.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இறுதிப் போட்டியில் விளையாடாமல் போனதற்கு காரணம் அணியின் உள்ள காம்பினேஷன் தான். நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று கவலை கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: SA vs IND: ’விராட் கோலியை விட ரவீந்திர ஜடேஜா மீது தான் பொறாமை... ஆனால்.. உடைத்து பேசிய அஸ்வின்!
மேலும் படிக்க: Team India Squad: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20, ODI தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு!