Ind Vs Aus T20: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டி-20 போட்டி நடைபெற உள்ள, ராய்பூர் மைதானத்திற்கான மின்சார கட்டணம் 2009ம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி-20 போட்டி:


ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்த்ய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று நடைபெற உள்ளது. அந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வசதியே இல்லை என்பது தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராய்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானம்:


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி-20 போட்டி, ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு முதல் மைதானத்திற்கான மின்சார கட்டணம் செலுத்தாமல் மைதான நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தமாக, 3.16 கோடி ரூபாய் கட்டணம் நிலுவையில் உள்ளதால் , 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.


மின் இணைப்பு இன்றி போட்டியா?


மின்சார வசதி துண்டிக்கப்பட்ட நிலையில், சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஒரு தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பெட்டிகளில் மட்டுமே விளக்குகள் எரியும். களத்திற்கு வெளிச்சம் தரும் பிரமாண்ட விளக்குகள் ஜெனரேட்டர்கள் மூலம் மட்டுமே ஒளிரூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக இணைப்பின் திறன் 200 கிலோ வோல்ட் ஆக உள்ளது.  இதை  ஆயிரம் கிலோ வோல்ட் ஆக உயர்த்துவதற்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.


கட்டணம் செலுத்தாது ஏன்?


மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும். ஆனால், மின்கட்டணம் செலுத்துவதில் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. நிலுவைத் தொகையை வழங்குமாறு மின்வாரியத்தினர் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்கு, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பணம் செலுத்தப்படவில்லை. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து மூன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.