Glenn Phillips Applying Saliva On: உலகக் கோப்பை 2023க்கு பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாவது நாளில், நியூசிலாந்து அணியை சேர்ந்த கிளென் பிலிப்ஸ் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலை செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


என்ன நடந்தது..? 


நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், க்ளென் பிலிப்ஸ் நிரந்தரமாக தடைசெய்யப்பட்ட முறையான பந்தில் எச்சிலை தேய்கும் முறையை பயன்படுத்தியுள்ளார். 


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் பந்துகளில் எச்சிலை பயன்படுத்தி பந்தை ஒரு பக்கம் தேய்கும் முறையை ஐசிசி தற்காலிகமாக தடை செய்தது. அதன் பின்னர் கொரோனா அலை முடிந்தும் கூட ஐசிசி எச்சிலை (உமிழ்நீரை) பயன்படுத்தவதை நிரந்தரமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இப்போது கிளென் பிலிப்ஸ் பந்தில் பிலிப்ஸ் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.






34வது ஓவரில் நஸ்முல் ஹுசைன் ஷாண்டோவுக்கு எதிராக பிலிப்ஸ் பந்து வீச வந்தபோது, ​​ஓவரைத் தொடங்கி, இரண்டாவது பந்திற்கு முன்பு ஒருமுறை அல்ல இரண்டு முறை பந்தில் எச்சிலைத் தடவினார். எச்சில் தடவும் தடைக்குப் பிறகு, வீரர்கள் பந்தைப் பிரகாசிக்க தங்கள் முகத்தில் உள்ள வியர்வையைப் பயன்படுத்துகிறார்கள்.


மைதானத்தில் இருந்த நடுவர்கள் பிலிப்ஸின் உமிழ்நீரை தடவிய பிறகு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவத்தின் போது எஹ்சான் ராசா மற்றும் பால் ரீஃபெல் ஆகியோர் கள நடுவர்களாக இருந்தனர். 'ESPNcriinfo' படி, இந்த விஷயத்தில் ஐசிசி பேச மறுத்துவிட்டதாகவும், மைதானத்தில் எழும் பிரச்சனைகளை போட்டி அதிகாரிகளே தீர்த்து வைப்பார்கள் என்று கூறப்பட்டது. 


நியூசிலாந்து - வங்கதேச அணிகள் மோதிய டெஸ்ட்டில் இதுவரை: 


வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது நாள் முடிவில் நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ 104 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 43 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


அதன்பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் சதத்தின் உதவியால் 317 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் வங்கதேச அணி மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 212 ரன்களை எடுத்துள்ளது. 






முன்னதாக, வங்கதேச முதல் இன்னிங்ஸ் ஆடியபோது கிளென் பிலிப்ஸ் பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.