ஆசிய கோப்பையின் முதல் ஆட்டம் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பல பெரிய சாதனைகள் படைக்கப்பட்டன. ஐந்தாவது விக்கெட்டுக்கு பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஜோடி 214 ரன்கள் சேர்த்தது.


3வது பெரிய பார்ட்னர்ஷிப்:


இதன்மூலம், ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் பட்டியலில் மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. இதுவரை ஆசிய கோப்பையில் அதிக பார்ட்னர்ஷிப் சாதனை முகமது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் பெயரில் உள்ளது.  கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருவரும் 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் உள்ளன. 


பாகிஸ்தான் - நேபாளம் இடையேயான போட்டியில் பல பெரிய சாதனைகள்...


நேபாளத்திற்கு எதிரான் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் குவித்து அசத்தினார். இதனையடுத்து, ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் கேப்டன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதுதவிர இப்திகார் அகமது  அதிவேகமாக 67 பந்துகளில் சதம் கடந்தார்.


இது ஐசிசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு இது ஆறாவது அதிவேக சதமாக பதிவானது. முன்னதாக, பாகிஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனை ஷாகித் அப்ரிடியின் பெயரில் இன்னும் உள்ளது.  கடந்த 1996-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஷாகித் அப்ரிடி 37 பந்துகளில் சதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்தப் போட்டியில் வேறு என்னென்ன சாதனைகள் படைக்கப்பட்டது..? 


ஐந்தாவது விக்கெட்டுக்கு பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஜோடி 214 ரன்கள் சேர்த்தது. நான்காவது அல்லது குறைந்த வரிசையில் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். முன்னதாக இந்த சாதனை முகமது யூசுப் மற்றும் சோயப் மாலிக் பெயரில் இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு  இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்த ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முகமது யூசுப் மற்றும் சோயப் மாலிக் ஜோடி 206 ரன்கள் எடுத்தனர். 


2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையே முல்தானில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் எடுத்திருந்தனர். 






343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 23.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால், பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.