ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேபாள அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. பாகிஸ்தான் - நேபாளம் இடையிலான போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

343 ரன்கள் இலக்கு:

அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இப்திகார் அகமது 109 ரன்களும் எடுத்திருந்தனர். 

நேபாள அணி சார்பில் சோம்பல் காமி 2 விக்கெட்களும், கரண் மற்றும் லாமிசென்னே தலா ஒரு விக்கெட்கள் கைப்பற்றி இருந்தனர். 

 

மிரட்டல் பவுலிங்:

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி 23.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் பாபர் அசாம் அணி அபார வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. ஷஹீன் அப்ரிடி முதல் ஓவரிலேயே நேபாள அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தார். நேபாளத்தின் முதல் மூன்று வீரர்கள் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதற்குப் பிறகு, ஆரிப் ஷேக் மற்றும் சோம்பால் கமி நேபாள அணியின் ஸ்கோரை உயர்த்த கடுமையாக போராடினர். இருப்பினும் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, பாகிஸ்தானின் அற்புத பந்துவீச்சால் 8 நேபாள பேட்ஸ்மேன்களால் இரட்டை ரன்களை கடக்க முடியவில்லை.

வெற்றியுடன் தொடக்கம்

இதனால், நேபாள அணி 23.4 ஓவர்களில் 104 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நேபாள அணியில் அதிகபட்சமாக சோம்பால் கமி 46 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சதாப் கான் 4 விக்கெட்களும், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.