ஜெய்ஷாவிற்கு பாகிஸ்தான் வீரர் கோரிக்கை:


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக டிசம்பரில் பதவியேற்க உள்ளார். முன்னதாக,15 நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெய்ஷா. இதன் மூலம் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்கும் இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.


இச்சூழாலில் தான் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நடக்க உள்ள முதல் போட்டி  சாம்பியன்ஸ் டிராபி. அந்தவகையில்  சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் தான் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான், ஜெய்ஷாவை விளையாட்டு வீரரின் உணர்வை நிலைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய ஐசிசி தலைவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயண அனுமதியைப் பெற உதவ வேண்டும் என்று பரிந்துரைத்தார்.  இது தொடர்பாக அவர் பேசுகையில்,"ஐசிசி தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதன் மூலம் கிரிக்கெட் உயர வேண்டும். ஐசிசி தலைவரின் நல்ல முயற்சியால், இந்தியா பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வருவதைப் போல, ஜெய் ஷா விளையாட்டு உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அதே போல் பாகிஸ்தானாலும் இந்தியாவிற்கு வருகை தந்து விளையாட முடியும். " என்று கூறியுள்ளார். 


மாற்றம் தேவை:


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜான் புக்கனனும், விளையாட்டின் நீண்ட வடிவங்களைப் பாதுகாக்க சில துணிச்சலான முடிவுகளை எடுக்குமாறு ஜெய்ஷாவை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டுள்ளதால், ஐசிசி விளையாட்டிற்காக சில நல்ல நீண்ட கால முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது. வீரர்கள் இரண்டு வடிவங்களில் மட்டுமே தரமான கிரிக்கெட்டை விளையாடுவது மிகவும் கடினம், அதாவது குறுகிய வடிவம் மற்றும் நீண்ட வடிவம். எங்களுக்கு 50 ஓவர் கிரிக்கெட்டின் மாற்றம் தேவை."என்று கூறியுள்ளார்.