ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் எந்தெந்த வீரர்கள் அணிகளில் தக்க வைக்கப்படுவார்கள், யார் யார் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


அதிலும் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடுவார இல்லையா என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இச்சூழலில் தான் ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டும் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.


தோனி விளையாட வேண்டும்:


இது தொடர்பாக அவர் பேசுகையில், "2025 ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு அவர் எப்படி பேட்டிங் செய்தார் என்பதை பார்த்ததால் இதை நான் சொல்கிறேன். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டது என்பதை வைத்தும், ருதுராஜ் கெய்க்வாட் எப்படி கேப்டன்சி செய்தார் என்பதை வைத்தும், அவருக்கு இன்னும் ஓராண்டு உதவி தேவை என்று நான் நினைக்கிறேன். அதற்காக தோனி ஆட வேண்டும். அதே சமயம், ருதுராஜ் தனது பணியை சிறப்பாகவே செய்துள்ளார்"என்று கூறியுள்ளார். 


முன்னதாக ஐபிஎல் அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பதை பிசிசிஐ வெளியிட்டால் மட்டுமே சென்னை அணியால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்கவைக்கலாம் என்ற விதியை பிசிசிஐ அறிவித்தால் மட்டுமே தோனி விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.